மாமண்டூர் குடைவரைக் கோயில்கள் [பல்லவர்]

கி.பி 6ஆம் நூற்றாண்டு....

பல்லவ மன்னர்கள் மலைகள், பெரும் கற்பாறைகள் ஆகியவற்றைக் குடைந்து குடைவரை குகைக் கோயில்களை உருவாக்க மிக்க ஆர்வம் காட்டிய காலம்.

பக்தி இயக்கம் மூலம் ஆழ்வார்களும் நாயன்மார்களும் கோயில் கட்டிடக் கலைக்கு மேலும் உற்சாகம் கொடுத்த காலம்.

சமணர்கள் குகைகளில் பள்ளிகள் அமைத்து வாழ்ந்த அதே காலத்தில் சைவ வைணவக் கோயில்கள் குகைக் கோயில்களாக மாறிய காலம்.

பல்லவ தேசம் முழுவதும் உள்ள ப்ரம்மாண்டமான மலைகள், குகைகள்,பாறைகள் மகேந்திர பல்லவன் [1] தன் கருத்தைக் கவர்ந்தன.

”விசித்ர சித்தன்” என்றும் ”சித்ரகாரப் புலி” என்றும் தன் கலை ஆர்வத்திற்கும் கலைப் பணிக்கும் மக்கள் மூலம் பாராட்டப் பெற்றவன் அல்லவா?

அவன் படைப்புகள் பல தோன்றின.

அவற்றுள் ஒன்று தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாமண்டூர் குடைவரைக் கோயில்கள்.

போவோமா?

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி போக்ம் சாலையில் தூசி என்ற ஊருக்கு அருகில் மாமண்டூர் உள்ளது.காஞ்சிபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைகிறது.

இந்திய தேசத்தில் தொல்பொருள் துறையினரின் கட்டுப்பாட்டின் கீழ் பாதுகாக்கப்படும் பெருமை உடையது மாமண்டூர் குகைக் கோயில்.

மாமல்லபுரம், பல்லாவரம், சீயமங்கலம், சிங்கவரம், திருச்சி மலைக்கோட்டை,மாமண்டூர் போன்ற இடங்களில் மகேந்திரவர்மனின் குடைவரைக் கோயில்கள் காணலாம்.

மாமண்டூரில் அம்மன்னன் காலத்துக் கல்வெட்டு ப்ராமி எழுத்து வடிவில் பொறிந்துள்ளது.

பாலாற்றங்கரையில் தான் மாமண்டூர் குகைக் கோயில்கள் உள்ளன.

முதல் குகைக் கோயிலில் நரசிம்ம பெருமாள் உள்ளார்.

இரண்டாம் குகைக் கோயில் சிவனுக்கு உரியது.

இதை ”சைவ ருத்ரவலீச்சரம்” என்று மகேந்திரன் குறிக்கிறான்.

அழகிய த்வார பாலகர்கள் காவல் கொள்ள மகேந்திரன் காலத்து சிவலிங்கம் இன்றும் உள்ளது.

பிரம்மாவுக்கும் தனி சன்னிதியை ஏற்படுத்தினான்.

சைவத்தையும் வைணவத்தையும் இரு முக்கிய சமயங்களாகப் பல்லவர்கள் பின்பற்றினர்.

இதே காலத்தில் தான் பாண்டியர்களும் ஒத்தக்கடை, திருப்பரம்குன்றம்,கழுகுமலை போன்ற இடங்களில் குகைக் கோயில்கள் கட்டினர்.

கோயிலின் ஊரின் நீர்த் தேவைக்கு ”சித்ரமேக தடாகம்” என்ற குளத்தை மகேந்திர பல்லவன் ஏற்படுத்தியுள்ளான்.அது குகைகளுக்குப் பின் உள்ளது.

குகைகளில் அவன் காலத்துத் தமிழ் கல்வெட்டுகளும் ஓவியங்களும் உள.அவற்றைக் காப்பது நம் கடமை.

”இசைக் கலையில் ஓவியக் கலையில் கோயில் கட்டிடக் கலையில் இதுவரை யாருமே கண்டு அறியாத புதுமைகளைக் காண நான் முயல்கிறேன்” - என்று மகேந்திர வர்ம பல்லவன் எழுதியுள்ளான்.இக்கால இளைஞர்கள் இதைக் கருத்தில் கொள்க.அரசர்கள் தேசத்தில் பல நன்மைகளைச் செய்தனர்.

பிற்காலத்தில் பராந்தக சோழன் 1 இக்கோயிலைப் பராமரித்துள்ளான்.அவன் காலத்தில் குகைகள் முழுதும் வண்ணம் பூசப்பட்டது.

ஐந்து குகைக் குடைவரைக் கோயில்கள் மொத்தம் உள.

ஒரு கோயில் பாறையின் மீது அமைகிறது.

கல் க்வாரிகள் மூலம் மண் வளத்தை சீர் கெடுக்கும் இக்கால மக்கள் உணர்க - அரசன் நினைத்து இருந்தால் அனைத்து பாறைகளையும் உடைத்து விற்று இருக்கலாம், மாளிகைகள் கட்டி வைத்து இருக்கலாம்.

குடைவரைக் கோயில் என்பது புதிய கலை வடிவம் மட்டும் அல்ல அது கற்களை சுரண்டுவதைத் தடுக்கும் பணி!

இருக்கும் வளத்தையாவது காப்போம்.

மாமண்டூர் சென்று வருக!