திருமுறை கண்ட சோழன் ராஜராஜன் 1

[கி.பி 947 - கி.பி 1014]

பிறப்பு: ஐப்பசி மாதம் சதயம் நாள்

பெரிய கோயில் எழுப்பப்பட்ட காலம் - கி.பி 1003 - கி.பி 1010 [ஏழு ஆண்டுகள்]

தந்தை - பராந்தக சுந்தர சோழன்

தாய் - வானவன் மாதேவி

இயற்பெயர் - அருள்மொழி வர்மன்

அண்ணன் - ஆதித்ய கரிகாலன்

அக்காள் - குந்தவை

ஆட்சிக்கு வந்த ஆண்டு - கி.பி 985

தன் முப்பத்தி எட்டாம் வயதில் ஆட்சிக்கு வந்தான்.

ஐம்பத்தியேழு ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.

தன் அண்ணன் ஆதித்ய கரிகாலன் ஆளும் போது போரில் கொல்லப்பட,அதைத் தொடர்ந்து உத்தம சோழன் வர, அவன் இறந்தபின் ராஜராஜன் ஆட்சிக்கு வருகிறான்.

தன்னை, ”ராஜராஜ சிவபாத சேகரன்” என்று அழைத்துக் கொள்வதில் ஈடற்ற மகிழ்ச்சி உண்டு.சிவனின் பாதத்தையே தான் அடிமையாகத் தலையில் சதா அணிவதாகக் கல்வெட்டுகளில் பதிவாக்கியுள்ளான்.

தன் அக்காள் குந்தவையைத் தன் அரச ஆலோசகியாக்கிப் பெண்மையின் மேன்மையைக் காட்டினான்.

லோகமாதேவி, புவனமாதேவி என இரு அரசிகளும் மற்றும் இரு மனைவியரும் அவனுக்கு இருந்தனர்.

மகன் - ராஜேந்திரன் 1

மகள்கள் - குந்தவை [அக்காள் மீதுள்ள அன்பால் தன் மகளுக்கு அவர் பெயர் சூட்டினான்], மாதேவ அடிகள், கங்கமாதேவி.

உலகம் போற்றும் தஞ்சைப் பெரிய கோயில் எடுத்தான் இந்த ராஜராஜன்.

அது சரி, அவன் தமிழுக்குச் செய்த மா....பெரும் பணி தெரியுமா?

அது தான் காலத்தால் மறைந்த மறைக்கப்பட்ட தமிழ் தெய்வீகத் திருப்பதிகங்களை ”தேவாரம்” என உலகிற்கு அளித்த ஒப்பற்ற பணி.

ராஜராஜன் இல்லையேல் இன்று தமிழுக்கு தேவாரம் இல்லை...”பக்தியின் வெளிப்பாட்டு மொழி” என்ற மேன்மையும் இல்லை.

ஆனால் தேவாரமாக அளித்த மன்னனுக்கு உரிய மரியாதை இல்லை....சைவ மக்களும் அவனை மறந்தனரோ?

கி.பி 6 - 9 ஆம் நூற்றாண்டுகளில் சம்பந்தர், அப்பர்,, சுந்தரரால் பாடப்பட்ட திருப்பதிகங்கள் சிதம்பரத்தில் கோயிலில் ஓர் அறைக்குள் வைக்கப்பட்டு, பின் கேட்பார் இன்றி ஓலைகள் கறையானால் வீணான சமயத்தில் நம்பி ஆண்டார் நம்பி என்ற அன்பரின் மூலம் ராஜராஜ சோழன் வெளிக்கொண்டு வந்தான்.

அவற்றுள் பல ஓலைகள் வீணாகிப் பொடிந்து போயின.எஞ்சியவற்றை அவன் முறைப்படுத்தினான்.சம்பந்தருக்கு யாழ் வாசித்த திருநீலகண்ட யாழ்பாணர் தம் குலமரபில் வந்த மதங்கசூளாமணி என்ற பெண்மணி தேவார ராகங்களை வழிவழியாய்க் கற்றுப் பாடிவர,அவள் உதவியுடன் தேவாரப் பதிகங்களுக்கு இசை அமைத்தான் மன்னன்.

அவற்றைப் பாடவும், அதற்கு ஏற்ப நாட்டியத்தையும் அமைத்தான்.

தஞ்சைப் பெரியகோயிலின் குடமுழுக்கு அன்று தேவார இசையை மீட்டுருவாக்கம் செய்தான்,மக்கள் வியந்தனர், விழிப்புணர்வு கொண்டனர்,பதிகங்கள் பல ப்ரதிகள் எடுக்கப்பட்டு பல ஊர்களுக்கு, குறிப்பாய், பாடல் பெற்ற ஊர்களுக்கு அனுப்பப் பட்டுக் கோயிலில் பயன்பாட்டுக்கு வர, அதைப் பாடும் இசைக் கலைஞர்களுக்கு ”ஓதுவார்” பட்டமும் பணியும், அதற்கு ஆடும் ஆண் பெண் தேவர் அடியார்களுக்கு உயர் பணியும் கோயில்களில் ராஜராஜன் ஏற்படுத்தினான்.

அதனால் அவனுக்குத் ”திருமுறை கண்ட சோழன்” என்ற ஒப்பற்ற பட்டத்தைச் சமூஹம் அக்காலத்தே வழங்கியது.

இன்று பார் புகழும் தமிழ்ப் பதிகங்கள் அவன் இல்லையேல் இல்லை.அவனது தமிழ்த் தொண்டை அடுத்த தலைமுறை அறியட்டும்.

ஆழ்வார்கள் பாடிய தமிழ் பக்திப் பாடல்கள் ஸ்ரீநாதமுனிகளால் தொகுக்கப்பட்டு பரப்பப்பட்ட நன்றிக்காக வைஷ்ணவக் கோயில்களில் அவருக்குத் தனி சன்னிதி உண்டு, அவரது பிறந்த நாளையும் வைஷ்ணவக் கோயில்கள் கொண்டாடுவதைக் காண்க.அது போல் சைவக் கோயில்கள் ராஜராஜனுக்கு சன்னிதியோ உற்சவ மூர்த்தியோ அமைத்து அவனது ஐப்பசி சதயம் நாளைக் கொண்டாடலாமே?

யோசியுங்கள்!