திருவொற்றியூர்
மதராஸின் வடக்குக்கோடியில் உள்ளது திருவொற்றியூர்.
தொண்டை தேசத்தின் மிக முக்கியமான தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலம் இவ்வூர்.
அழகிய, பழமைமிக்கக் கடற்கரை ஊர்.
”ஊரின் மண் துகள் ஒவ்வொன்றும் சிவலிங்கம், கடலோரத்துக் குளங்கள் எல்லாம் கங்கை” என்று கி.பி 10ஆம் நூற்றாண்டின் பூம்புகார்ச் சித்தர் பட்டிணத்தார் புகழும் ஸ்தலம்.
முன்பு கூறியது போல் மதராஸின் ஆன்மீக பலம் அதனுள் ஐக்யமாகி இந்நொடி வரை அருள் சுரக்கும் சித்தர்தம் ஜீவசமாதிகள் என்பதில் ஐயமில்லை.
கடற்கரையில் பட்டிணத்தார் சமாதியைக் காண்க.அவர் தன் உருவையே லிங்கமாக [சிவதத்துவமாக] மாற்றிக் கொண்டார்.
அருகிலேயே காய்கறி மார்கெட் வீதியில் வள்ளலார் அடிக்கடி வந்து இளைப்பாறி, மக்களையும் நண்பர்களையும் கண்டு ஆன்மீக உரை செய்த அவரது மண்டபம் உள்ளது.அதில் அவரது மிகத் தொன்மையான படமும், அவர் திருத்தணி முருகனைப் பார்த்த கண்ணாடியும் உள.
திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில் மிகத் தொன்மையானது.சாட்சி அதன் மதில் சுவர்.
மூலஸ்தானம் பல்லவர்களின் கட்டிடக் கலையில் அமைந்துள்ளது.
மிக வித்யாசமான முறையில் சதுரமான பெட்டி போன்ற வடிவில் ஈசன் விளங்குகிறார்.
ஆதிசங்கரர் பூஜித்த காளி ஈசனின் வலப்பக்கம் உள்ளாள்.
சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மனம் விரும்பி சங்கிலி நாச்சியாரைத் திருமணம் செய்து கொண்ட ஊர்.அவ்விழா இன்றும் மகிழடி உற்சவம் என்ற பெயரில் நடைபெறுகிறது.
இக்கோயிலில் உள்ள உத்சவர் ஸ்ரீத்யாகராஜ ஸ்வாமி மிக அழகானவர்.அதனால் தான் சுந்தரர் திருவாரூரை மறந்து வாழ்ந்தார் போலும்?!
27 நக்ஷத்ரங்களுக்கும் சிவலிங்கமும் ஸ்தல மரமும் உண்டு.
அம்பிகை ”வடிவுடை அம்மன்” என்று மதராஸ் மக்களின் கனவுகளை நனவாக்கும் சக்தியை அருள்பவளாக விளங்குகிறாள்.
ஆதிசங்கரர் அம்பிக்கைக்கு ஸ்ரீசக்ர ப்ரதிஷ்டை செய்து, பல்லவரின் ஆசைக்கு ஏற்ப காலடியில் இருந்து நம்பூதிரிமார்களை இங்கு பூஜைக்கு அமர்த்தினார்.இன்று அவ்வழி மரபினரே அன்னையை பூஜிக்கின்றனர்.
வடிவில் மிக கம்பீரமானவள் - வடிவுடை நாயகி!
அவளைப் பூப்பாவாடையில் காணக் கண்கள் பல தேவை.
நாத ப்ரஹ்மம் ஸ்ரீத்யாகராஜர் அன்னையைத் ”திருவொற்றியூர்ப் பஞ்சரத்ன க்ருதிகள்” கொண்டு வணங்கினார்.
நாத ஜ்யோதி ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் மணலி வணிகர்-துபாஷி ஸ்ரீமுத்து க்ருஷ்ணன் மூலம் திருவாரூரில் இருந்து இங்கு வந்து பலகாலம் வாழ்ந்தனர்.
துபாஷியின் உறுதுணையுடன் மதராஸ் ஜார்ஜ் கோட்டைக்குள் நிகழும் மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளைக் கேட்கும் வாய்க்கு தீக்ஷிதருக்கும் அவரது தம்பி ராமசாமிக்கும் கிடைத்தது, மேற்கத்திய இசையின் அடிப்படை ஞானமும் உண்டானது.
அதன் பயனாய் தீக்ஷிதர் பல மேற்கத்திய ஸ்வர notes செய்து அருளியுள்ளார்.அவரது தம்பி முறைப்படி வயலின் கற்றுக் கொண்டு அதை பாரத இசைக்குப் பழக்கம் செய்து அறிமுகம் செய்தார்.இதற்கெல்லாம் இடம் தந்தது மதராஸ்!
கலயானர் என்ற நாயனார் வாழ்ந்த ஊர் இது. அருணகிரி திருப்புகழ் பாடிய ஊர் இது!
வள்ளலார் ஈசனையும் தேவியையும் மனமாரப் பல பாக்களால் திருவருட்பாவில் பக்திப் பதிவாக்கி உள்ளார். வள்ளலார் அடிக்கடி வந்து போன ஊர் இது!
ஆடைகள் அற்ற அவதூதி ஒருவர் மக்களைப் பார்த்து, ”அதோ பேய் போகிறது, பன்றி போகிறது, நரி போகிறது...” என்று அவரவர் குணத்தை உணர்ந்து சாடுவது வழக்கம்.ஒரு முறை ப்ரதான சன்னிதித் தெருவில் வள்ளலார் போன போது அவதூதி, ”அதோ மனிதன் போகிறான்” என்ற ஊர் திருவொற்றியூரே!
தன் தந்தையின் திதி அன்று வள்ளலார் வெகு காலம் கழித்து வீடு திரும்ப,அனைவரும் உறங்கிவிட, திண்ணையிலேயே அவர் பசியால் வாடி உறங்க, அன்னை வடிவுடை நாயகி அவரது அண்ணியார் வடிவேற்று அவருக்குச் சோறிட்டதை எண்ணி எண்ணிப் பாடிக் கரைவதைக் காணலாம்.
தேரடிச் சாலையில் மிகச் சிறிய அழகிய பழனி ஆண்டவர் சன்னிதி உள்ளது, அதில் உள்ள முருகன் வித்யாசமானவர்.
திருவொற்றியூர் மதராஸின் ஆன்மீக, துறைமுகம் தொழில்சார் மையம்!