மதராஸின் முதல் அச்சகம்....

 

இன்று எப்போது வேண்டுமானாலும் எவ்விடத்திலும் கையில் அலைப்பேசியில் டைப் செய்து அதை உடனே இணையதளத்தில் பல ஆயிரம் பேரிக்கும் தான் எண்ணியதை வெளியிடும் வசதி வந்து விட்டது.

இதற்குக் காரணம் அச்சுத் தொழில் தான்.எந்திரத்தில் மனிதர்கள் உழைத்து உருவேற்றிய எழுத்துக்கள் இன்று டிஜிட்டல் வடிவில் வந்துள்ளன.

பாரத தேசத்தின் மொழிகளில் முதலில் அச்சேறியது இனிமைத் தமிழே!

கி.பி 1554ல் போர்ச்சுகல் தேசத்தில் கார்டிலா என்ற கிறிஸ்துவ நூல் அச்சானது.

அதன் பின் கி.பி 1578ல் தமிழகத்தில் இருந்து நன்கு தமிழ் கற்ற கிறிஸ்துவர்கள் சிலரைக் கொண்டு லிஸ்பன் நகரில் டாக்ட்ரினா கிறிஸ்டியானா என்ற மத நூலை அச்சிட்டனர். இதற்குத் தம்பிரான் வணக்கம் என்று பெயர். வெறும் 16 பக்கங்கள் தான் இருந்தன.

அதன் பின் கி.பி 1712ல் தரங்கம்பாடிக்கு வந்த ஜெர்மன் பாதிரியார் சீகன்பால்க் தன் அயரா முயற்சியால் அச்சுக்களை உருவாக்கி முதல் பைபிளை மொழிபெயர்த்து  கி.பி 1715ல் வெளியிட்டார்.இவரே இந்திய அச்சுத்தொழிலின் தந்தை!

கி.பி 1761ல் தான் மெதுவாக அச்சுத்தொழில் மதராஸுக்குள் அடியெடுத்து வைத்தது.

அவ்வாண்டில் ஃப்ரெஞ்சுக்கும் ஆங்கிலேயருக்கும் கடுமையான போர் எழுந்து ஆங்கிலேயர் போரை வென்றனர்.எப்போதும் போல் பொருட்களைக் கொள்ளை அடித்த ஆங்கிலப் படை, [ஐர் கூட் அதிகாரியின் ஆலோசனையின் பேரில்] தமிழ் அச்சுக்களை, எந்திரத்தை ஜார்ஜ் கோட்டைக்குக் கொண்டு வந்து சேர்த்தது.ஆனால் யாருக்கும் அதைப் பயன்படுத்தத் தெரியவில்லையாம்!

சில ஆண்டுகள் கழித்து தமிழ் அச்சுக் கோர்க்கும் கலை அறிந்த ஃபெப்ரீஷியஸ் என்ற பாதிரியார் மூலம் வேப்பேரியில் S.P.K press உருவாகி இன்று ப்ராட்வே பஸ்நிலையம் அருகில் C.L.S Pressஆக மாறியுள்ளது.

மிகத் தொன்மையான நூல்கள் இங்கு இன்றும் கிடைப்பது விசேஷம்.

மதச் சார்பான பணிகளுக்கே அச்சுக்கலை ஆரம்பத்தில் உதவியுள்ளது.புதுமையான மேற்கத்திய காகிதத்தில் அச்சாகி வரும் ஆன்மீக நெறிகள் மத மாற்றத்துக்கு ஒரு நாகரிக நவீன காரணமும் ஆகி உள்ளதைக் காண்க.ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளைப் பேணும் நாம், முதல் தமிழ் பைபிளைப் பேணாமல் போனது சரியில்லை.