Central railway station - சென்ட்ரல் ரயில்வே நிலையம்

சென்னை என்றவுடன் பலரது கண் முன் வருவது அழகிய சிவப்பான தேவாலம் போன்ற அமைப்புள்ள சென்ட்ரல் ரயில் நிலையம்.1873ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் நான்கு ப்ளாட்ஃபார்முடன் கூடிய இவ்விடத்தை உருவாக்கினர். ஆனால் சில குறிப்புகள் 1900ஆம் ஆண்டில் இக்கட்டிடம் முடிவடைந்ததாகக் கூறும்.மெட்ராஸ் - தென் மாராட்டா ரயில்வே என்பதே ஆரம்ப காலப் பெயராம்.

1931 ஆம் ஆண்டில் ரயில் நிலையத்தில் மின் வசதி செய்யப் பட்டது.

ஜார்ஜ் ஹார்டிங் என்ற ஆங்கிலேயப் பொறியாளர் இதை வடிவமைத்தார்.

இன்று ஒரு நாளுக்கு 3,50,000 பயணிகள் ரயில் நிலையத்தைப் பயன்படுத்துகிறார்களாம்.

போர்த்துகீஸிய வணிகரின் தோட்ட வீடே சென்ட்ரல்...

1660ல் நாகப்பட்டிணத்தில் இருந்து மதராஸில் செட்டில் ஆனவர் வணிகர் ஜாவோ பெரீரா.இவர் போர்த்துகீஸ் தேசத்தவர்.இவரது தோட்ட வீடு இருந்த இடம் தான் இன்றைய சென்ட்ரலில் முன் பகுதி.அவர் காலத்துக்குப் பின் கேத்பார் அற்றுப் போன இவ்விடம் கோழிச்சண்டையின் ஆடுகளமாக இருந்துள்ளது. மதராஸ் துறைமுகத்தில் வரும் வணிகர்களும் உள்ளூர் வியாபாரிகளும் களியாட்டம் போடும் இடமாக இருந்த இவ்விடத்தை ஆங்கிலேயர் எடுத்துக் கொண்டு சென்ட்ரலின் முன் பகுதியை அழகுறக் கட்டினர்.அதற்கு முன் டிரினிட்டி தேவாலயம் இப்பகுதியில் 1831ல் எழுப்பப் பட்டது.

இன்று சென்ட்ரலில் பாரத தேசத்தின் முழுமையான ஜன சமூஹத்தையும் பார்க்க முடியும்.தேசத்தின் பல்வேறு இடங்களையும் இணைக்கும் நரம்பு மண்டலம் ஆகும். எத்தனை கோடி ஜனங்கள், தலைவர்கள் இதில் இறங்கி ஏறினர்? அப்பப்பா....அதிசயமான அற்புதமான சென்ட்ரலை இரவில் பார்ப்பதே அழகு.எத்தனை முறை புகைப்படம் எடுத்தாலும் தெவிட்டாத சில இடங்களில் இதுவும் ஒன்று.