Sakthi Foundation

மதுரையைச் சுற்றியுள்ள சமணக் கல்வெட்டுகள்

 

1. மதுரை மாங்குளம் சமணக் கல்வெட்டுகள் கூறும் அறப்பணிகள்

தமிழ் மொழியில் மிகவும் பழமையான எழுத்து வடிவங்கள் இன்று கல்வெட்டுகள் மூலமே கிடைக்கின்றன.மதுரையைச் சுற்றி அமைந்துள்ள குன்றுகளிலும் கல்பாறைகளிலும் உருவாக்கப்பட்டுள்ள சமண சமயத்தின் கல்வெட்டுக்களே அவை.அவற்றின் மூலம் இக்கால மக்கள் எதை உணர வேண்டும் என்பதை Pallikoodam என்ற தலைப்பின் கீழ் பதிவாக்கியுள்ளோம்.

அக்கல்வெட்டுக்களையும் அதன் கருத்தையும் இப்பகுதியில் தருவதன் மூலம் நாளை கல்வெட்டுக்கள் மீது ஆர்வம் ஏற்படும்.கல்வெட்டுகள் வரலாற்றின் பதிவேடுகள்!

பெரும்பாலும் கல்வெட்டுகள் ப்ராமி என்ற எழுத்து வடிவத்தில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டுகள் ஆகும்.பிற்காலத்தில் ஆங்காங்கே சில கன்னடக் கல்வெட்டுகளும் உள.

மாங்குளம் - மதுரையின் வடகிழக்கில் 20 km தொலைவில் உள்ளது.அவ்வூரில் ஓவாதுமலை அல்லது கழுகுமலை அமைந்துள்ளது.கி.பி 1882ல் ஆங்கிலேயர் ராபர்ட் சீவல் இம்மலையில் உள்ள சமணக்கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தார்.காலத்தால் மிகவும் மூத்த கல்வெட்டுகள் இவை [கி.மு 3].மொத்தம் 34 கல்படுக்கைகள் உள்ளன.

மாங்குளம் சமணப்பள்ளிக்கு உதவி செய்தவர்கள் ஒரு ஆசானுக்கு வெவ்வேறு சமயத்தில் உதவியுள்ளனர்.ஒவ்வொரு கல்வெட்டையும் வேறு வெட்டுவான்கள் அடித்துள்ளனர்.

1. கணிய் நந்த அ ஸிரிய் இ குல் அன்கேதம்மம் இத்தா அ

நெடுஞ்சழியன் பண அன் கடல் அன் வழுத்திப்

கொட்டு பித்த அ பளி இய்

என்ன அர்த்தம்?

பாண்டியன் நெடுசெழியனின் அரசாங்க அலுவலன் கடலன் வழுத்தி என்பவன், கணிநந்த ஸ்ரீகுவன் என்ற சமண குருவுக்குத் தன் ஊருக்கு சேவை செய்ய உருவாக்கிக் கொடுத்த பளி [சமணப்பள்ளி]

* அரசாங்கத்தின் சம்பாத்தியம் பெறும் அலுவன் சமூஹத் தொண்டு செய்ததற்கு ஒரு உதாரணம் இது ஆகும்.

* பளி - இது பாலி மொழிச் சொல், சமணர் சேவை செய்ய உருவாக்கப் பட்ட ஸ்தலம், இதுவே பள்ளி ஆனது.சமணரின் கல்படுக்கைக்கும் பள்ளி எனப் பெயர் உண்டாம்.அதனால் தான் பள்ளிகொள்ளுதல், பள்ளி உணர்த்துதல், பள்ளி எழுச்சி, பள்ளி அறை ஆகிய வார்த்தைகள் உருவாயின.

* கொட்டுப்பித்த - கல் மீது உளியை அடித்து [கொட்டி] உருவான

_______________________________________________________________________________

2. கணிய் நந்த ஸிரிய குஅன் தமய் ஈதா நெடுஞ்செழியன்

ஸாலகன் இளஞ்சடிகன் தந்தைய் சடிகன் சேஇய பளிய்

என்ன அர்த்தம்?

பாண்டியன் நெடுஞ்செழியனின் சகலை [co-brother] இளஞ்சடிகன்.அவனுடைய தந்தையின் பெயர் சடிகன்.அவனும் கணிநந்த ஸ்ரீகுவன் சமண குருவிற்கும் அவரது குழுவுக்கும் இப்பள்ளியை உருவாக்கிக் கொடுத்தான்.எனவே இது சிலரது கூட்டி அறப்பணியே ஆகும்.

* சாலகன் - சகலப்பாடி

___________________________________________________________________________________

3. கணி இ நத ஸிரிய்குவன் வெள் அறைய் நிகமது காவிதிஇய்

காழிதிக அந்தை அஸீதன் பிண உ கொடுபிதோன்

என்ன அர்த்தம்?

மாங்குளத்துக்கு அருகில் உள்ள இன்றைய வெள்ளரிப்பட்டிக்கு முற்காலப் பெயர் வெள்ளறை.அவ்வூரின் வாழ்ந்த ஒரு பெரிய வியாபாரக்குழுவின் தலைவன் அந்தை அஸீதன்.

காழிதிகன் - அவன் முத்துப் பரிசோதனை செய்பவன் ஆவான்.

நிகமம் - வணிகக்குழு

அவன் மிகச் சிறந்த அளவில் வியாபாரம் செய்ததால் பாண்டியரிடம் இருந்து காவிதிப் பட்டம் பெற்றுள்ளான்.

இவனும் கணிநந்த ஸ்ரீகுவன் சமணாச்சாரியாருக்கு பள்ளி அமைப்பதில் நிதி உதவி செய்துள்ளான்.

பிண உ - குகை

_______________________________________________________________________________________

4. சந்தரிதன் கொடுபிதோன்

சந்தரிதன் என்ற தனிமனிதன் செய்த உதவி

_______________________________________________________________________________________

5. வெள் அறை நிகமதோர் கொடி ஓர்

வெள்ளறை ஊரின் மற்றொரு வணிகக் குழுவின் நிதி உதவி

_______________________________________________________________________________________

2. அரிட்டாப்பட்டிக் கல்வெட்டுகள்

மதுரையில் இருந்து திருச்சி செல்லும் தேசியநெடுஞ்சாலையில் மேலூர் வரும்.அவ்வூருக்கு முன் அரிட்டாப்பட்டி அமைந்துள்ளது.மதுரை - அரிட்டாப்பட்டி 20Kms.

ஊரின் பெயர்க்காரணம்:

சமணஅ சமயத்தின் குருமார்களான தீர்த்தங்கரர்கள் மொத்தம் 24.அவர்களுள் 23வது மஹான் அரிட்டநேமி.அவரது வழிகாட்டலின் கீழ் வந்த குருமார்கள் இவ்வூரின் கண் பள்ளி அமைத்து சேவை செய்ததால் அரிட்டாப்பட்டி என்று பெயர் வந்துள்ளது.

அரிட்டாப்பட்டிக்கு மேற்கில் இளமைநாயகி புரம் என்ற ஊர் உள்ளது.

அதற்கு அருகில் கழிஞ்சமலை உள்ளது.

அம்மலையில் தான் சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன.

இரண்டு கல்வெட்டுகள் சமண் பள்ளியில் உள்ளன.

சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை இவை.

1. நெல் வெளிஇய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன்

 

என்ன அர்த்தம்?

நெல் வெளி - திருநெல்வேலி

இவ்வூரில் வாழ்ந்த சிழிவன் அதினன் வெளியன் என்பவனின் நிதி உதவியால் இப்பள்ளி அமைந்துள்ளது.நெல்லையைச் சேர்ந்த இவன் மதுரையில் வந்து வாழ்ந்திருக்க வேண்டும்.ஊரின் பெயரை முன் வைத்தும், தொழிலைச் சேர்த்தும், அதன் பின் தந்தையின் பெயரை ஒட்டித் தன் பெயரைக் கூறுவது பழந்தமிழ் மரபு.இது எளிதான தொடர்பு கொள்ளுதற்கு இயந்தது.

 

முழாகை - கற்குகை

__________________________________________________________________________________

2. இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன்

இவ்முழ உகைய் கொடுபிதவன்

 

என்ன அர்த்தம்?

இலஞ்சி எமவயனின் மகன் எளம்பேராதன் செய்து கொடுத்த பள்ளி.[Observe the initial pattern with town and father]

நெல்லைக்கு அருகில் உள்ள இலஞ்சி [புகழ் பெற்ற முருக ஸ்தலம்] ஊரைச் சேர்ந்த எளம்பேராதன் முந்தைய கல்வெட்டில் உள்ள அதினனின் தோழனாக இருக்கலாம்.அவனது சேர்க்கையாலும் வழிகாட்டுதலாலும் இவ்வறப்பணியைச் செய்திருக்க வேண்டும்.

_____________________________________________________________________________________

தீர்த்தங்கரர் சிற்பம்

அரிட்டாப்பட்டி சமணர் குகையில் மிக அழகிய தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பமும் உள்ளது.அவரை அரிட்ட நேமி எனவும் கொள்ளலாம்.[கி.பி 9-10]

சமண சமயத்தின் மூன்று தத்துவங்களைக் குறிக்கும் மூன்று குடையின் கீழ் அவர் நிர்வாண கதியில் அமர்ந்துள்ளார்.

அவருக்கு இருபுறமும் அழகிய சுடர்வீசும் குத்து விளக்குகள் உள்ளன.அவை light energy கோட்பாட்டின் படி வழிபாட்டுச் சடங்கையும் ஞானத்தையும் உணர்த்தும்.அவரது தலைக்கு மேல் இருபுறமும் வெண்சாமரங்கள் உள்ளன.அவை ஞானத்திற்கு உலகம் காட்டும் மரியாதையை உணர்த்தும்.

அதன் அருகில் சுண்ணக்கலவையின் மீது தூய இயற்கை வண்ண ஓவியங்கள் உள்ளன.அவை மங்கலாக உள்ளன.பச்சை, மஞ்சள், வெண்மை, சிவப்பு, நீலம் ஆகிய வண்ணங்களே உள்ளன.

சிற்பத்தின் கீழ் உள்ள வட்டெழுத்து வடிவக் கல்வெட்டு:

 

ஸ்ரீ திருபிணையன் மலை

பொற்கோட்டு கரணத்தார் பேரால்

அச்சணந்தி செய்வித்த திருமேனி

பாதிரிக்குடியார் ரக்ஷை

* வட்டெழுத்து வழக்கில் வந்த காலத்தில் ஸ்ரீ என்ற குறியீடு வந்து விட்டதைக் காண்க.

 

கழிஞ்சமலையின் இயற்பெயர் திருப்பிணையன் மலை.

கி.பி 9-10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அச்சணந்தி முனிவரே தமிழகத்தில் மீண்டும் சமணத்தைப் பரப்பியவர்.

அவரது அறிவுரையில் கீழ் அவருக்கு மரியாதையுடன் பாதிரிக்குடி என்ற ஊரில் பொற்கோட்டுக் கரணத்தார் என்ற ஊர் அதிகாரம் செலுத்தும் அலுவலர்கள் சேர்ந்து செய்வித்த தீர்த்தங்கரர் இவர் என்று கூறப்படுகிறது.

* கரணத்தவர் - அதிகாரிகள்

_________________________________________________________________________________

3.அழகர் மலை

 

சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள் போன்றவற்றில் மிகவும் வர்ணிக்கப்படும் அழகர் மலை இருங்குன்றம் என்று குறிக்கப்படுகிறது.இதன் மீது முருகனின் ஆறாம் படைவீடான பழமுதிர்ச்சோலையும், கீழே கள்ளழகர் திருக்கோயிலும் அமைந்துள்ளன.மதுரையின் மிக முக்கியமான சித்திரைத் திருவிழாவிற்கு அழகர் தானே வருகிறார்? சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படையும் பழமுதிர்ச்சோலையை மிகவும் விளக்கிச் சொல்கிறது.

இம்மலையின் ஒரு பகுதி இன்று லதா மாதவன் பொறியியல் கல்லூரிக்குப் பின்புறம் படர்வதைக் காணலாம்.அதில் சமணர் தம் கி.மு. 2, கி.பி .9-10 நூற்றாண்டின் சமணச் சின்னங்கள் உள.

அணியாத அழகர் [ஆடை அணியாத அழகர்] என்ற பெயரில் அருகதேவர் [ஆதிநாதர்] இங்கு வணங்கப்பட்டுள்ளார்.அவரது சிற்பமும் 13 ப்ராமிக் கல்வெட்டுகளும், கற்கால மனிதர் தம் ஓவியங்களும் அமைந்துள்ளன.

மதுரைக்கு வேறு பெயர்கள்: மதிரை, மத்திரை [இவை maybe வேறு தேசத்து சமணத்துறவிகளின் உச்சரிப்பாக இருக்கலாம்]

கொடை அளித்த வணிகர்களின் பெயர்கள் :

மதிரைப் பொற்கொல்லன், மதுரை உப்பு வாணிகன் வியக்கன், பணித வணிகன் நெடுமலன், கொழுவணிகன் எளசந்தன், அறுவை வணிகன் எள அடன்

சபமிதா என்ற பெண் சமணத்துறவியின் பெயரும் கல்வெட்டில் உள்ளது.

* சமூஹத்தில் அரசனுக்கு அடுத்துப் பெருஞ்செல்வம் சம்பாதித்த வணிகர்களை அறப்பணிக்கு சமணம் கவர்ந்துள்ளதைக் கருத்தில் கொள்க.

____________________________________________________________________________________

4. ஆனை மலை

திருஞானசம்பந்தர் மதுரையில் உள்ள சமணர் பற்றிக் கூறுகையில் ஆனை மலையில் இருந்த சமணப் பள்ளியை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்.இது ஆனை ஒன்று படுத்தது போல் இயற்கையாக அமைந்த மாபெரும் பாறைக்குன்று.இதையே ஒத்தக்கடை என்கிறோம்.மதுரைக்குக் கிழக்கில் திருச்சி சாலையில் 8Km தொலைவில் அமைந்துள்ள இம்மலையில் உள்ள நரசிம்மர், முருகன் குடைவரைக் கோயில்களும் மிகவும் புகழ் கொண்டவை.ஆனால் அவற்றுடன் சம்பந்தர் காலத்தே அவருடன் சமய வாதம் செய்த மிக முக்கிய சமண முனிகள் ஆனைமலைப் பகுதியையே சேர்ந்தவர்கள். [கி.பி 7]

”ஆனை மாமலை ஆதியாய இடங்களில் பல

அல்லல் சேர் அமணர்க்கு எளியேன் அல்லேன்”

[சம்பந்தர் தேவாரம்]

* கி.பி 9-10ல் ஒத்தக்கடை ஊரை நரசிங்கபுரம் என்று கல்வெட்டு சுட்டுவதால் அப்போதே நரசிங்கர் குடைவரை இருக்கிறது என்று கொள்க.

* இம்மலையை ”இவ குன்றம்” [இபம் - யானை] என்று சமணக்கல்வெட்டுகள் கூறும்.

* பல சமணப் புராணக்கதைகளை விளக்கும் சிற்பங்கள் இம்மலையில் உள.

* சைவமும் சமணமும் சமரசம் செய்தன

சம்பந்தரின் காலத்தில் அவரது வாதத்தில் தோற்ற சமணர் சில கோட்பாடுகளை ஏற்றுக் கொள்கிறார்கள்.[இது மறைக்கப்பட்ட உண்மை]சைவத்தும் சமணத்துக்கு ஒரு சமரச உடன்பாடு வந்துள்ளது.அதனால் தான் அவ்வூர் அந்தணர்கள் இம்மலையில் உள்ள திருமேனிகளைக் [தெய்வீகச் சிற்பங்கள்] காப்பதாக வாக்கு அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.சமணர்கள் கழுவில் ஏற்றிக் கொலை செய்யப்பட்டது பொய்.

* மிக முக்கியமான சமண சமய முனிகள், குறிப்பாக வாதம்-தர்க்கம் செய்பவர்கள் இம்மலையில் இருந்துள்ளனர்.20 கற்படுக்கைகள் கிடைக்கின்றன.

* அரட்டை வாயன்

அப்படிப்பட்ட ஒரு சமய தர்க வாதியையே அத்துவாயி என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது.அத்து வாயி என்றால் ஒரு கருத்தை விளக்கிக் கூறுவது எனப்பொருள்.இதன் மூலச் சொல் பாலியின் அட்டவாயி.இதுவே இன்று அரட்டை வாய் என்று பொருள் மாறுபட்டுவிட்டதைக் காண்க.

கல்வெட்டு:

இவகுன்றது உறையுள் பாதந்தான் ஏரி ஆரிதன்

அத்துவாயி அரட்ட காயிபன்

ஏரி ஆரிதன் - அத்துவாயி அரட்ட காயிபன்.காயியன் - காஷ்யபன் கோத்திரத்துத் தோன்றியவர்கள்.இவர்கள் அந்தணர்களாக இருந்து சமணத்தில் சேர்ந்திருக்கக் கூடும்.இவர்களை மீண்டும் சம்பந்தர் வேதத்தின் உட்பொருளை உணரச் செய்திருக்க வேண்டும்.அதனால் தான் இவர்கள் சமசரம் செய்திருக்கிறார்கள்.சம்பந்தரின் வருகையால் சமரசம் கண்ட இவர்களின் சமணப்பள்ளிகளை ”நரசிங்கபுரத்து சபையார் ரட்சை” என்று அவ்வூர் அந்தணர்கள் ஆதரித்துக் காக்க முன்வந்துள்ளதைக் கல்வெட்டு கூறும்.

மேற்கூறிய இருவரும் சமய வாதத்திலும் சொற்பொழிவிலும் சிறந்தவர்கள்.அவர்களுக்குக் கற்படுக்கை ஏற்படுத்தியதை இக்கல்வெட்டு கூறுகிறது.

சமணச்சிற்பங்கள்:

மஹாவீரர், நேமிநாதர், பார்சுவ நாதர், பகுபாலி [கோமடேஸ்வரர்], அவரது இரு சகோதரிகள், பெண் சக்தி தேவதை அம்பிகா ஆகியோர் அழகிய நிலையில் அலங்கரிக்கும் ஓவியங்களுடன் உள்ளன.

புராண விளக்கச் சிற்பம்:

பார்சுவ நாதரைக் கமடாசுரன் பாறை கொண்டு தாக்க வருகிறான்.

பத்மாவதி என்ற சமணப் பெண்சக்தி தெய்வம் அதைத் தடுக்கிறாள்.

பின் அவன் இவரது திருவடிகளில் பணிகிறான்.

தனி மனிதப் பெயர்கள்:

புரவு வரி திணைக்களத்தார் ரட்சை

பொற்கோட்டுக் கரணத்தார் ரட்சை

பரிவார புரவு வரியார் ரட்சை

களவழி நாட்டு அணியனைச் சார்த்தி ஏனாதி நாடி

தென்களவழி நாட்டுப் பெருவேம்புத்தூர் செழிய பாண்டி

பெண்புரை நாட்டு வெண்புரை

சாத்தன் நாட்டு வெண்பைக்குடி

வேட்டஞ்சேரி புதுமை எவியம் பூதி

__________________________________________________________________________

5. கொங்கற்புளியகுளம்

மதுரை-தேனி சாலையில் 15 Km தொலைவில் காமராசர் பல்கலைக் கழகத்துக்கு அருகில் நாகமலையில் சமணப்பள்ளி உள்ளது.

கல்வெட்டு 1:

குற கொடுபிதவன் உபசன் உபறுவன்

அப்படி என்றால்?

சமண சமய ஆச்சாரியரான உபறுவன் என்பவருக்கு இக்குகைப் பள்ளி அமைத்துத் தந்தது.

* உபசன் - ஆசான் [உயர் ஆன்மீகக் கோட்பாடுகளை உபதேசிப்பவன்]

கல்வெட்டு 2:

குறு கொடல் குஈத்தவன் செற் அதன் ஒன்

அப்படி என்றால்?

சேரதன் என்பவன் மூலம் இக்குகையின் கூரைப்பகுதி செதுக்கப்பட்டது.

* குறு - குகையின் மேல் கூரை

* கொடல் - கொடுத்தல்

* குயித்தவன் - குகையைக் குத்திச் செதுக்கியவன்

கல்வெட்டு 3:

பாகன் ஊர் பேராதன் பிடன் இத்தவே பொன்

மதுரை சோழவந்தானுக்கு அருகில் வைகைக் கரையில் உள்ள பாகனூரைச் சேர்ந்து ஆதன் பிட்டன் கொடுத்த வெள்ளி [வேபொன்] [சமணப்பள்ளி நிகழ்வதற்கு]

ஸ்ரீஅச்சணந்தி ஆச்சாரியரால் செய்விக்கப்பட்ட தீர்த்தங்கரரின் சிற்பமும் இடம்பெற்றுள்ளது.

_________________________________________________________________________________

6. கீழக்குயில்குடி [சமணர் மலை - பேய்ச்சிப் பள்ளம் - செட்டிப் புடவு]

காமராசர் பல்கலைக் கழகத்தை அடுத்து அமைந்துள்ளது.[12km from Madurai]

கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய பகுதிகளில் சமணர் மலை பரவியுள்ளது.பல காலம் மதுரைப் பல்கலைக்கழகத்தில் நாங்கள் தங்கிப் படித்த போது இதைப் பற்றி அறியவில்லை.எங்கள் விடுதியில் இருந்து பார்த்தாலே இம்மலை தெரியும்.பேராசிரியர்கள் கூட எங்கள் தகவலுக்கு இதைப்பற்றிச் சொல்லவில்லை என்று வருந்துகிறேன்.இன்று 20ஆண்டுகள் கழித்து அங்கு சென்று காண, ஆய்வு செய்ய நேரம் தேட வேண்டியதாக இருக்கிறது.

சமீப காலத்தில் பெரிய இடி விழுந்து பல சமணச் சின்னங்கள் வீணாகிவிட்டன.

மதுரையைச் சுற்றியுள்ள எண்பெரும் குன்றுகளில் இப்பகுதியிலேயே அதிக அளவு சிற்பங்களும், கற்படுக்கைகளும், கல்வெட்டுகளும் உள.

அம்மலைக்குப் போகும் வழியில் ஒரு நடு கல் இருந்தது.இன்று உள்ளதா என்று தெரியவில்லை.

கி.மு 2 நூற்றாண்டின் கல்வெட்டு:

பெருதேரூர் குழித்தை அய அம்

 

என்ன அர்த்தம்?

பெருந்தேரூர் - இக்காலத் தேனூர் மக்கள் குடைந்து செய்து கொடுத்த சமணக்கல்படுக்கை.

* குழித்த - குடைந்த, அயம் - அயனம் என்றதன் மாற்றம், அதாவது சயனம் - படுக்கை

________________________________________________________________________________

மலையின் கிழப்பக்கம் செல்க.

தாமரைக்குளம் இருக்கும்.

அதை ஒட்டிய செதுக்கிய கல் படிகள் மீது ஏறிச்செல்க.

மேலே சுனையும் அச்சுனையின் கல்லில் 8 சிற்பங்களும், அதைச் செய்தோரின் பெயர்களும் உள.

முக்குடை அண்ணல், பகுபாலி - சகோதரிகள், பார்சுவநாதர், மஹாவீரர், சில முற்றுப்பெறாத சிற்பங்கள் உள.[இவை கி.பி 9-10]

அவற்றின் நடுவில் கல் சுவற்றில் ஓட்டைகள் உள.அதில் கம்புகள் பொருத்தி, நிழல் செய்து பள்ளி நடந்துள்ளது.

கல்வெட்டு:

ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி

 

மிக ப்ரபலமான அச்சணந்தி என்ற சமண முனியின் அன்னை குணமதி செய்து தந்த சிற்பம்.

கல்வெட்டு:

வைஸ்திஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அந்தலையான் மாசேனன் மருமகன் ஆச்சஞ் சிரிபாலனைச் சார்த்தி செவித்த திருமேனி

 

என்ன அர்த்தம்?

சமணச்சாரியர் ஸ்ரீகுணசேன தேவரின் மாணவன் அந்தலையன் மாசேனன் என்பவனின் மருமகன் ஸ்ரீபாலனைக் கொண்டு செய்த சிற்பம்.

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குண சேன தேவர் சட்டன் அரையங்காவிதி தங்க னம்பியைச் செய்விச்ச திருமேனி

 

என்ன அர்த்தம்?

சமணாச்சாரியன் குணசேன தேவரின் மாணவன் அரையங்காவிதி பட்டம் பெற்ற தங்கநம்பி செய்த சிற்பம்.

கல்வெட்டு:

ஸ்ரீவெண்பு நாட்டு திருக்குறண்டி பாதமூலத்தான் அமித்தின் மரைகள் கனகன்தி செய்விச்ச திருமேனி

என்ன அர்த்தம்?

குறண்டி என்ற ஊரில் வாழ்ந்த கனகந்தி என்பவன் செய்த சிற்பம்.

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேனதேவர் சட்டன் சிங்கடைப்புறத்து

கண்டன் பொற்பட்டன் செய்வித்த திருமேனி

 

என்ன அர்த்தம்?

குணசேன தேவரின் மாணவன் சிங்கடைப்புறம் பொற்பட்டன் செய்த சிற்பம்.

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீமதுரைக் காட்டாம் பள்ளி அரிஷ்டநேமி அடிகள் செய்வித்த திருமேனி

என்ன அர்த்தம்?

மதுரைக் காட்டாம் பள்ளி அரிஷ்ட நேமி அடிகள் என்ற துறவி செய்த சிற்பம்.

பேய்ச்சிப்பள்ளம் என்ற இடத்தின் மேல் மாதேவிப்பெரும்பள்ளி என்ற சமணப் பள்ளி அறப்பணி செய்தது.அப்பள்ளியின் சிதைந்த அடித்தளம் மட்டுமே உள்ளது.கி.பி. 860-905 ல் மதுரையை ஆண்ட பாண்டியன் பரந்தாக வீரநாராயணன் தன் மனைவியின் பெயரால் செய்த அறப்பணி இப்பள்ளி ஆகும்.

கல்வெட்டு:

ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறஞ்சடையற்கு யாண்டு

இருப்பதேழிதனெதிராண்டி னெ திரான்டு

மாடக்குளக் கீழ் திருவுருவகத்து

மாதேவிப் பெரும்பள்ளியைச்

சந்தம் நாட்டாற்றுப் புறத்து புளிங்குன்றூர் நீர்நிலமிகு

வேலியாலும் கீழ்மாந்தரமான வயும் அதன் துடவரும் மேற்றி நிலம்

இரண்டு மாவும் திருவுருவகத்து மலைக்கீழ் போயின வடகீழ்

சிறிபால வயக்கலு மிதன் தென்வய....

 

என்ன அர்த்தம்?

பாண்டிய மன்னனின் மனைவியின் பேரில் அவளின் நலனுக்காக அவளின் துணையுடன் இப்பள்ளி செய்து தரப்பட்டது.இம்மலையின் பெயர் திரு உருவகம்.இதற்கு மாதம் தோறும் வருவாய் வர கொங்கிற்புளியகுளம் ஊரில் நிலம் தரப்பட்டுள்ளது.

பள்ளிக்கும் மேல் மலையை ஏறினால் உச்சியில் தற்கால தீபக்கம்பம் வரும்.திருக்கார்த்தியில் அதை ஏற்றி மக்கள் வழிபடுவர்.அதன் அருகில் உள்ள கட்டடத்தில் சிலக் கன்னட மொழிக்கல்வெட்டுகள் உள.

கன்னடக் கல்வெட்டு இங்கே எப்படி?

கன்னட தேசத்தின் சிரவண பெல ஹொல்லா சமணர்களின் மிக முக்கிய நகரம் ஆகும்.உலகின் மிக பெரிய சிலைகளுள் ஒன்றான பகுபாலியின் வடிவம் இங்குள்ளது.அங்கிருந்து மதத்தைப் பரப்ப சமண முனிகள் மதுரைக்கு வந்துள்ளனர்.

கல்வெட்டு:

ஆரிய தேவரு

ஆரிய தேவர்

மூலசங்க பெளகுல தவள

சந்தர தேவரு நமிதேவரு சூர்ய

ப்ரதாப ஆஜித சேனதேவரு மா....[சிதைவு]

...... தானதேவரு நாக தர்ம தேவரு

 

கன்னட தேசத்து ச்ரவண பெள ஹொள்லாவே பிற்காலத்தில் மிக முக்கியத் தென் பாரத சமணத்தின் தலைமைப்பீடமானது என்பதை இக்கல்வெட்டு கூறும்.அங்கிருந்து மதுரைக்கு வந்து மீண்டும் சமணத்தைப் புத்துணர்வு செய்ய முயன்ற சமணாச்சாரியர்களின் பெயர்கள் இங்குள்ளன.

இம்மலையின் தென்பக்கம் உள்ள மலைப்பகுதிக்கு செட்டிபுடவு என்று பெயர்.மிகச் செல்வந்தரான செட்டி ஒருவரால் உருவாக்கப்பட்ட பள்ளி இது.

தமிழகத்தின் மிகப்பெரிய மஹாவீரரின் சிற்பம் [6.5அடி] இங்குதான் உள்ளது.மிக அழகான கம்பீரமான சிலை இது.

கல்வெட்டு:

வெண்பு நாட்டு குறண்டி திருக்காட்டாம்பள்ளி

கனக நந்திப் படாரர் அபினந்த படாரர் அவர் மாணாக்கர்

அரிமண்டல படாரர் பினந்தனப் படாரர் செய்வித்த திருமேனி

 

பல மாணக்கர் சேர்ந்து இந்த அழகிய பெரிய சிற்பத்தைச் செய்துள்ளனர்.

மூன்று தீர்த்தங்காரர்கள், கொற்றவை, அசுரப் போர், அம்பிகா என்ற பெண் தேவதை ஆகிய சிற்பங்களும் உள்ளன.அவற்றைச் செய்தவர்களின் பெயர்களும் உள்ளன.

கல்வெட்டுகள்:

1. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளிவுடைய குணசேன தேவர் சட்டன் தெய்வ

பலதேவர் செய்விச்ச திருமேனி

 

2. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்பு நாட்டுக் குறண்டித்

திருக்காட்டாம்பள்ளிக் குணசேன தேவர் மாணாக்கர்

வர்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள்

செய்வித்த திருமேனி.

 

3. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ர குணசேன தேவர் சட்டன்

அந்தலையான் களக்குடி தன்னைச் சார்த்தி செய்வித்த திருமேனி

 

* இக்காலகட்டத்தில் குணசேன தேவர் என்பரே மிக உயர்ந்த சமணாச்சரியாராக இருந்துள்ளார்.

________________________________________________________________

7. திருப்பரங்குன்றம்

முருகனின் முதல்படை வீடான இம்மலை மிகப்பழைய வழிபாட்டு ஸ்தலம்.இம்மலையின் ஒரு பகுதியில் சமணப்பள்ளி இருக்கின்றது.

மதுரை-விருதுநகர் தேசியநெடுஞ்சாலையில் 8Kmதொலைவில் அமைந்துள்ளது.மதுரையில் இருந்து பார்த்தாலே இம்மலை காட்சி தருகிறது.

பத்து கற்படுக்கைகள் இங்கே உள.

1. அந்துவன் கொடு பிதவன் என்று கல்வெட்டு கூறுகிறது. [கி.மு ஒன்று]

2. மாரயது கய[ம்] [கி.மு ஒன்று]

 

மாரயம் என்பது பாண்டிய மன்னன் வழங்கும் ஒரு விருது.அதைப் பெற்ற ஒருவது வெட்டிக் கொடுத்த பள்ளிக் குளம்.

3.எருகாடூர் ஈழகுடும்பிகன் போலாலயன் செய்தா

ஆய்சயன நெடுசாதன் [கி.பி ஒன்று]

எருகாட்டூரில் வாழும் இலங்கையில் இருந்து வந்து வாழும் நெடுஞ்சாத்தன் என்றவன் செய்து கொடுத்த கற்படுக்கை என்று அர்த்தம்.

திருப்பரங்குன்றத்தில் பழனி ஆண்டவன் கோயிலின் பின்பக்கம் உள்ள சுனைக்கருகில் மஹாவீரர், பார்சுவதேவர், பகுபாலி ஆகியோரின் சிற்பங்கள் உள்ளன.அவற்றின் அருகில் உள்ள கல்வெட்டுகள்...

4. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்பு நாட்டுத் திருக்குறண்டி அனந்த வீர்யப்பணி [கி.பி ஒன்பது]

இக்கால ஆவியூருக்கு அருகில் உள்ள குறண்டி ஊரில் வாழ்ந்த அனந்தவீர்யன் இம்மஹாவீரர் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.

5. ஸ்வஸ்தி ஸ்ரீ சிவிகை ஏறின

படையர் நீலனா இன இளந்தம்மடிகள்

மாணாக்கன் வாணன் பலதேவன் செவ்விச்ச இப்பிரதிமை

மதுரைக்குள் போக பல்லக்கு ஏறும் செல்வாக்கை உடைய ஆசான் நீலனா இன இளந்தம் அடிகளின் மாணவன் வாணன் பலதேவன் செய்வித்த பகுபாலி.

_______________________________________________________________________________

8. முத்துப்பட்டி

மதுரையில் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள வடபழஞ்சி ஊருக்கு அருகில் உள்ளது முத்துப்பட்டி.இங்குள்ள பாறைக்குன்றுகள் கரடிப்பட்டி பெருமாள் மலை என்று தற்போது அழைக்கப்படும். கரடு என்பதே கரடி ஆனது.கரடி என்பது கற்பாறைகள்.தற்போதைய பாரதி நகரின் அருகில் உள்ள புகைவண்டி நிலையம் தாண்டி இப்பகுதிக்குச் செல்க.

1. நாகப்பேரூர் அந்தை முசிறி கோடன் எளமகன்....

சேர தேசத்தின் தலைநகர் வஞ்சி.அதுவே இக்காலக் கொடுங்கல்லூர்.அதன் துறைமுகப்பகுதிக்கு ஆதிகாலத்தில் முசிறி என்று பெயர்.அவ்வூரைச் சேர்ந்த கோடன் இளமகன் என்பவன் நாகப்பேரூர் - இக்கால நாகமலைப்புதுக்கோட்டையின் ஊர்த்தலைவனின் நட்பைப் பெற்று இப்பள்ளியைக் கரடிப்பட்டி மலையில் செதுக்கினான்.

சேர-பாண்டிய தேச வணிகமும், சமணத்தின் போக்கும் இதன் மூலம் தெரியும்.

2. சைய் அளன் விந்தை ஊர் கவிய்

 இக்கால வண்டியூர் - விந்தையூர் சையளன் உதவியால் ஏற்பட்ட பள்ளி.

3. திடிக்காத்தான் மனம் எய்....

திடி என்ற ஊரைச் சார்ந்த என்றதோடு நிற்கிறது.

மதுரையைச் சுற்றியுள்ள 8 குன்றுகளில் உள்ள சமணக் கல்வெட்டுகளை, சிற்பங்களை, பள்ளிகளை நாம் மதித்துப் பாதுகாக்க வேண்டும்.அவற்றில் கூறப்பட்டுள்ள வாழ்க்கையைக் கடைப்பிடிப்போமாக!