அனைத்தையும் நானே ஆள வேண்டும், கைக்கொள்ள வேண்டும் என்ற பேராஆஆஆசையின் குறியீடு தான் மஹாபலிச் சக்ரவர்த்தி.
 
இவன் ப்ரஹலாதனின் பேரன்.ஆனால் தாத்தாவின் பக்தியுடன் பேராசையும் அவனுள் இருக்க, உலகையே கைக்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறான்.
 
எந்த வகையிலும் சுகம் பெறலாம் என்ற வேகம் தான் அசுர சக்தி.அதையே சுக்ரன் என்கிறோம்.சுக்ரனைக் கொண்டு யாகம் செய்தான் மஹாபலி.
 
யாகத்தில் யார் எதைக் கேட்டாலும் தானம் செய்ய, மக்களின் வேண்டுதலின் பெயரில் மஹாவிஷ்ணு கஷ்யபர் - அதிதி தம்பதிகளின் குள்ள மகனாகப் பிறந்து [வாமனன்] மஹாபலியின் யாக சாலையுள் வந்து மூன்று அடி நிலம் யாசகம் கேட்டார்.
 
”கேவலம் குள்ளமான உன் குறுகிய பாதத்தால் மூன்றடி போதுமா?” என்று கேலியாக மஹாபலி கேட்க,
 
”மூன்றடி நிலத்தால் த்ருப்தி கொள்ளாதவன் மூன்று உலகங்களைக் கொடுப்பினும் த்ருப்தி கொள்ள மாட்டான்” என்று கூற, 
 
”வந்தவன் மஹாவிஷ்ணு, தானம் தராதே” என்று அசுர சக்தியாக சுக்ரன் தடுக்க,[தீர்த்தக் கம்லண்டலத்துள் வண்டாகச் சென்று தீர்த்தம் வார்ப்பதைத் தடுத்தான் சுக்ரன்] வாமனன் தன் தர்பைப் புல் கொண்டு சுக்ரனின் கண்களைக் குத்தினான்.
 
மூன்று அடி நிலம் கொடுத்த போது முதலடியால் பூமியையும், இரண்டாம் அடியால் ப்ரபஞ்சத்தையும் அளந்த வாமனன் மஹா த்ரிவிக்ரம மூர்த்தியாக மாறினான்.மூன்றாவது அடிக்கு இடம் இல்லை.அப்போது தன் ஆணவத்தின் தன்மை உணர்ந்த மஹாபலி தன் தலை மீது மூன்றாவது அடியை வைத்து அனைத்தை விட மிகப் பெரியதாக இருக்கும் ஆணவத்தை பலி கொடுத்தான்.
 
பெருமாளும் அவனை ஆசீர்வதித்து, அவனது செல்வங்களை மீண்டும் அருளினார்.அன்று ஆவணி மாதம் திருவோணம்.அதுவே ஓணம்.இப்புராணம் சேர தேசம் திருக்காக்கரை திவ்ய தேசத்தில் நிகழ்ந்ததாக ஐதீஹம்.
 
பல ஆண்டுகட்கு முன் ஓணம் பத்து நாட்கள் நிகழும்.
 
ஓணத்தை முற்காலப் பாண்டியர் மதுரையிக் கொண்டாடினர்.
 
இன்றும் ஓணம் அன்று சகல திவ்ய தேசங்களிலும் பெருமாளுக்கு விசேஷ அபிஷேகம் உண்டு.
 
மதுரையில் கூடல் அழகர் கோயிலில் ஓணம் நாளில் யானைப் போர் நிகழ்ந்ததை சங்க நூல்கள் கூறும்.
 
பூமியை ஆள நினைக்கும் ஒவ்வொரு தேசமும் மனிதமும் இயற்கையால் அடிவாங்குவதே ஓணம்.சமீபத்தில் சேர தேசத்தில் உண்மையான வாமன அவதாரம் ஏற்பட்டுள்ளது.
 
எந்தை தந்தை தந்தை தந்தை
தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி
வந்து வந்து வழி வழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
ஐந்தலையப் பைநாகத் தலை பாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே!
 
பெரியாழ்வார்- திருப்பல்லாண்டு