சோழர்களின் தலைநகராய் விளங்கிய பூம்புகார் பெளத்த சமயத்தைக் கிழக்கு ஆசிய தேசங்களுக்குப் பரவ நுழைவாயிலாக அமைந்தது.
இன்று அவ்வூரில் உள்ள கி.மு 4ஆம் நூற்றாண்டைச் சார்ந்த புத்த விஹாரம் சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குறிக்கப்படுகிறது.
இந்திர விஹாரம் என்று அதன் பெயர்.அதில் துறவிகளின் அறைகள், வெங்கல புத்தர் சிலை, மடத்தின் பசுவின் எலும்புகள் கொண்ட புதை குழி, மணிமேகலையில் குறிக்கப்பெறும் பளிங்கினால் ஆன புத்தரின் திருவடித் தாமரைக் கல்பீடம் ஆகியன அகழ்வாய்வில் கிட்டியதை நா.த்யாகராசன் பதிவாக்கினார்.
பாலி மொழி புத்த நூல்கள் பூம்புகாரைக் காவீரப்பட்டிணம் என்றே கூறும்.
புத்த ஜாதகக் கதை ஒன்றில் வருவதாவது...
”த்ரமிள தேசத்தில் உள்ள காவீரப்பட்டிணத்தில் அகத்தி மாமுனி தவம் செய்தார்.அவ்வூரில் உள்ள ஏழைகளுக்கு அவர் தான் பெற்ற பொருளை தானம் செய்தார்.அவ்வூரில் உள்ள அடர்ந்த வனச்சோலையில் அவர் த்யானம் செய்தார், மக்கள் அவரிடம் பல அறக்கருத்துகளைக் கேட்டனர், அதன் பின் அவர் இலங்கையில் உள்ள யாழ்பாணத்துக்குக் கப்பல் மூலம் சென்றார்”
கி.மு 3ல் அசோகரின் மகன் மகேந்திரா, மகள் சங்கமித்ரா ஆகியோர் பூம்புகார் வந்து இந்திர விஹாரத்தில் தங்கினர்.அசோகர் ஏழு விஹாரங்கள் இவ்வூரின்கண் எழுப்பினார்.இன்று ஒன்று தான் எஞ்சியது.
மாதவியும் மணிமேகலையும் இந்திர விஹாரத்தில் அறவண அடிகள் முன்பு தான தர்மம் செய்து, புத்தத் துறவி ஆயினர்.
கரிகாலனின் மகன் மாவண் கிள்ளிச் சோழன் மணிமேகலையின் புத்த மதக் கருத்துக்களைக் கேட்டு,சிறையில் உள்ள குற்றவாளிகள் திருந்தி வாழும் மறுவாழ்வை உண்டாக்கினான்.
ரசவாஹினி என்ற பாலி மொழி நூல், பூம்புகாரின் சோழன் ஒருவன் சிவன் கோயில் கட்டும் போது, புத்தத் துறவிகள் அதைத் தடுத்து, அவன் மனதில் புத்த மதக் கருத்துக்களை விளக்கி அதை ஒரு புத்தர் கோயிலாக மாற்றினராம்.
கி.பி 4ஆம் நூற்றாண்டில் களப்பிறர் ஆட்சியில் புத்த தத்த தேரர் என்ற துறவி பூம்புகாரில் புத்த மதத்தின் வளர்ச்சி பற்றித் தன் நூலில் கூறியுள்ளார்.
கணதாஸர் என்ற புத்த மத ஆசான் தன் அபி தம்மாவதாரம் என்ற நூலில் பூம்புகாரின் இந்திர விஹாரத்தைப் பதிவு செய்கிறார்...
”பூம்புகாரின் மக்கள் கூட்டம் அதிகம்.இது வணிக ஸ்தலம்.இந்திர விஹாரம் நீண்ட உயர் சுவர்களால் சூழப்பட்டது.அவை தூய வெண்ணிறத்தில் உள.அதன் கதவுகள் பெரியன.கயிலை மலை போல் பெரிதாய் வெண்மையாய் உள்ளது.”
காவேரி பட்டணே ரம்மே நானா ராமோ பஸோபிதே...
காவேரி பட்டணே ஸம்பாத பரிபூத மஹீதலே...
என்ற வரிகள் பதிவாகி உள்ளன.