கொடுங்கல்லூர் - இன்றைய கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மிக ப்ரஸித்தி பெற்ற தேவி ஸ்தலம்.

அன்றைய சேர தேசத்தின் தலைநகராக இருந்தது.அப்போது அதன் பெயர் வஞ்சி மாநகர்.

வஞ்சி - பெண், கொற்றவை, காளி.காலம் காலமாக முன்னோர் வணங்கிய இன்று கேரளத்தின் ப்ரசித்தி பெற்ற கொடுங்கல்லூர் அம்மை பகவதி.

கண்ணகியின் வாழ்க்கை கழிந்த பின் அவளை வீரத்தின், கற்பின், பெண்ணியத்தின் தெய்வமாக, தேவியின் அவதாரமாக சமூஹத்திற்கு உதாரணமாகச் சேரன் செங்குட்டுவன் வணங்க முற்படுகிறான்.அதற்கு மிக மிக வேற்பு கொடுத்தவள் அவனது மஹாராணி வேண்மாள்.

குமுளி மலையில் கண்ணகி சமாதி ஆன இடத்தில் அவளுக்குக் கோயில் அமைத்து, உயர்ந்த பெண்ணான அவளுக்கு உயர் இமயத்தில் இருந்து தூய வெண்பளிங்குக் கல் கொண்டு வந்து அதை, காசி கங்கையில் நீராட்டி, அதில் கண்ணகியை வடிவாக்கி ப்ரதிஷ்ட்டை செய்தான்.அச்சிலையின் கீழ் பாகம் மட்டும் இன்று அங்கு உள்ளது.

கண்ணகிக்குப் பூஜை செய்ய அவளது தோழி தேவந்திகையை நியமித்தான்.ஆனால் தன் தலைநகரில் கண்ணகியைத் தன் ராணியும் மக்களுக்ம் வழிபட அவன் கண்ணகியின் அஸ்திக் கலசத்தையும், புடவை,ஆபரணங்கள், சிலம்பு ஆகியவற்றைக் கொடுங்கல்லூர் கோயிலின் மேற்கு நோக்கி, காளிக்கு அருகில் ரகசிய அறையுள் ப்ரதிஷ்ட்டை செய்தான்.அதையே வரலாற்று ஆய்வாளர்கள் THE SECRET CHAMBERஎன்பர்.கண்ணகியின் ஆத்மாவை காளியுள் சேர்த்து வணங்கும் வழிபாட்டு முறையைக் கொண்டு வர அதையே இலங்கை, கொங்கு தேசம் ஆகிய பகுதிகளிலும் அரசர்களும் மக்களும் கைக்கொண்டனர்.

ரகசிய அறையுள் என்ன உள்ளது என்று பார்ப்பது யார்க்கும் இயலாது.

கொடுங்கல்லூரில் காளியின் முன் அர்த்த மேரு மஹா யந்த்ரமும், ரஹசிய அறை முன் ஒரு அர்த்த மேரும் மஹா யந்த்ரமும் ஸ்தாபித்து அவற்றிற்குப் பூஜைகள் செய்வதைக் காணலாம்.

ஒரே சன்னிதியில் காளியையும் கண்ணகியையும் பூஜிப்பதைக் காண்க.கண்ணகியின் கழுத்தேறு என்ற திருமாங்கல்யக் கொத்து காளியின் கழுத்தில் உள்ளதைக் காண்க.

கண்ணகியின் காசு மாலையும் ஒரு வளையும் யந்த்ரத்தில் சார்த்தப்பட்டுள்ளதைக் காண்க.

சேர அரசி வேண்மாள் தங்க விளக்குகள் இரண்டு சமர்ப்பித்தாள், அவை இன்று பயன்பாட்டில் உள.

ஆடி அமாவாசை அன்று கண்ணகி மதுரையை எரித்தாள் என்று ஆய்வுகள் கூற, அன்று மாலை ரகசிய அறை திறக்கப் பட்டு அவளுக்கு மிக விசேஷ பூஜைகள் செய்வர்.அன்று காளியின் இடது மார்பில் மருந்து மஞ்சள் பூசுவர்.

கண்ணகி சமாதி ஆனது ஆடி அனுஷம்.அன்று பூம்புகாரின் அவள் குடி மக்களும் ஊராரும் அவளது கோயிலில் மிகக் கோலாகல உற்சவம் செய்வதை இன்றும் காண்க.

மாரி அம்மை, கொற்றவை, காளி, பகவதி என்று ஊரெல்லாம் உள்ள தேவியருடன் சேர்த்து அவளது ஆன்மாவை பூஜித்தனர் முன்னோர்.இலங்கையில் கண்ணகை அம்மை, பத்தினி தெய்யு என்று சுமார் 245 கோயில்கள் உள.

ஆடி மாதம் தேவி வழிபாட்டில் மிக முக்கிய இடம் பெறும் போது அதில் கண்ணகியின் வரலாறு சேர்ந்து கொண்டது.

இன்று கொடுங்கல்லூரில் காளி கோயிலுக்கு இடது புறம் உள்ள மேற்கூரை அல்லாத சன்னிதியில் உள்ள தேவி சிலையே சேரன் முதலில் தன் மாநகரில் வைத்த சிலை.காலத்தால் அது பின்னப்பட வெளியே வைக்கப்பட்டது.

மேலும் கொடுங்கலூரின் தென் பகுதியில் ஒற்றை முலைச்சி அம்மை கோயில் உள்ளது.ஒரு மார்பு இன்றி அம்மை அமர்ந்து இருக்கும் கோயில் அது.கண்ணகிக்கு ரகசிய அறை கட்டும் வரை அவ்விடத்தில் வைத்துத் தான் அவளது உடைமகள் பூஜிக்கப் பட்டன.தை மாதம் மகர சங்க்ராந்தி அன்று அவை கோயில் சேர்ந்ததை நினைவு கொள்ளவே ஆண்டு தோறும் பொங்கல் அன்று தாலப்பொலி விழா நிகழும்.அரச குடும்ப ப்ரதிநிதி யானை மீது தேவியை வைத்துக் கோயில் சேரும் விழா அது.

கோயிலின் வலது புறம் உள்ள சேத்ர பாலகர் சன்னிதியின் உள்ளே 18 அடி காவல் பூதம் உள்ளது.பூம்புகாரில் இருந்த காவல் பூதம்.பூம்புகார் கடலால் அழிந்த போது சேரனின் மைத்துனன் நெடுமணற்கிள்ளிச் சோழன் அச்சிலையைக் கொடுங்கலூருக்குக் கொண்டு சேர்த்தான்.

அதே போல் பூம்புகாரில் - விஷம், ஏவல், செய்வினை, பேய் ஆகியவற்றை குணம் ஆக்கும் நீண்ட கருமையான ஒளி மிக்க நெடுங்கல் இருந்தது.அதைச் சேரன் பெயர்த்துக் கொண்டு வந்து சோற்றாணிக்கரையில் பகவதியின் மூல ரூபமாக வைத்துள்ளான்.

சேரன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பியதைக் கொண்டு கர்நாடகத்தில் குடகு மலைப் பழங்குடி அரசன் குடஜாத்ரியில் வீர நடுகல் எழுப்பினான்.அதுவே மூகாம்பிகை.

கொங்கு தேசத்தில் கோவையில் சேரன் கோ நீ அம்மனையும் பல ஊர்களில் உள்ள காளிகோயிலில் கண்ணகியின் சக்தியைச் சேர்த்தி வழிபட ஏற்பாடு செய்தான்.

சேர மன்னன் திருவனந்தபுரத்தில் ஆற்றுக்கால் பகுதியில் கண்ணகியை பகவதியாய்க் கோயில் ஆக்கினான்.கண்ணகிக் கோட்டத்தில் இருந்தும் கொடுங்கல்லூரில் இருந்தும் பிடி மண் எடுத்து வந்து தமிழகம் முழுதும் கோயில்கள் எழுப்பினர்.

அதே போல் பங்குனி பரணி விழாவின் மிக முக்கியமாக காவு தீண்டல் என்ற சடங்கு மிக முக்கியம் ஆகும்.அப்போது கேரளத்தில் உள்ள பொற்கொல்லர்கள் ஆயிரக்கணக்கில் கோயிலை வலம் வருவர்.இன்றும் பொன் நகைகளை அவர்கள் கோயிலில் வீசி எறிவதைக் காண்க.யாரும் திருடுவதில்லை.

உயர்ந்த இல்லற தர்மமே நம் பாரத தேசத்தின் ஆணி வேர்.அதை விளக்கிட அவளது வாழ்க்கை இன்றும் உதவுகிறது.

என் பேராசிரியர் Dr.S.கோவிந்தராசனின் 16 ஆண்டுகள் அயராத ஆராய்ச்சியின் பயனாய் கண்ணகி கோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.ஒவ்வொரு சித்திராப் பூர்ணிமை அன்றும் நாம் சென்று காணலாம்.அதே போல் பாரதத்தின் உயர் வரலாற்று ஆய்வாளர் Dr.இந்துசூடன் அவர்களின் அயராத உழைப்பால் ரகசிய அறை ஆய்வுகள் வெளியாயின.

உயர்ந்த பண்பும் அன்பும் அரவணைப்பும் கொண்ட பெண்ணை சமூஹம் போற்றும் என்ற உண்மையைக் கண்ணகி உணர்த்துகிறாள்.அது ஆணுக்கும் பொருந்தும்.

ஆடியில் பல கோயில்களுக்குச் செல்வோம், காண்போம்,வழிபடுவோம், புதிய தலைமுறைக்குக் காட்டுவோம், பின்பற்றுவோம், உயர்வோம்.